Skip to main content

அடுத்தடுத்து மரணங்கள்: சிக்கலில் குடிபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் ! 

24x7_seithigal
24x7_seithigal

 

திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவரால் லைப் கேர் செண்டர் என்ற குடி போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது.

 

l

 

போதையை மறக்கடிக்க மறுவாழ்வைப் பெற என இங்கு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இங்கு சிகிச்சைக்காகத் தங்கியிருந்த சமயத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். வலிப்பு வந்து இறந்தனர் என மிகச்சாதாரணமாக சொன்னாலும் சிகிச்சை என்ற பெயரில் அங்கு விழுந்த தடியடி தாக்குதல் நடத்துவதாலே இறந்து போகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் அங்கு சிகிச்சைபெறுபவர்களின் உறவினர்கள். 

 

இந்த லைப் கேர் சென்டரில் காட்டுமன்னார்குடியை சேர்ந்தவரும், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலையத்தை சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலருமான தமிழ்ச்செல்வன் என்பவர் கடந்த 28-ம் தேதி மதுப் பழக்கத்தை மறக்கடிக்கும் சிகிச்சைக்காக இங்கு வந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

 

l

 

சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்ட சில நாட்களிலேயே காவலர் தமிழ்ச்செல்வன் கடந்த 1-ம் தேதி இறந்திருக்கின்றார். உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகக்கூறி இந்த இறப்பு சம்பவத்தை கே.கே.நகர் காவல்நிலையத்திற்கு தகவல் சொல்லாமல் மறைத்து தமிழ்ச்செல்வனின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி விட்டனர் லைப் கேர் சென்டர் ஊழியர்கள்.

 

உடல்நிலை சரியில்லாமல் தமிழ்ச்செல்வன் இறக்கவில்லை; சிகிச்சை என்ற பெயரில் அங்கு அவரை அடித்த அடியின் காரணமாகவே அவர் இறந்து விட்டார் என்று புகார் சொல்கிறார்கள் தமிழ்ச்செல்வனின் சொந்தக்காரர்கள். 

 

l

 

தமிழ்ச்செல்வனுக்கு இறுதி காரியங்கள் செய்யும்போது உடலை குளிப்பாட்ட சட்டையை கழற்ற உடல் எங்கும் இரத்த காயங்கள் இருப்பது கண்டு அதிர்ந்த அவரது குடும்பத்தினர் காரியம் முடிந்த கையோடு திருச்சி லைப் கேர் சென்டருக்கு நுழைந்த போது சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டும், ஹாலை விட்டு எங்கும் நகர்ந்திடாதபடி கால்கள் இரண்டும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ந்திருக்கின்றனர். 

 

இதுகுறித்து கே.கே.நகர் போலிசில் தகவல் சொன்ன போது 'புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே புகார் கொடுத்திருக்கிறார்கள் 

அங்கு சிகிக்சையில் உள்ளவர்கள் "நாங்கள் இங்கு நல்லாத்தான் இருக்கோம், ஆனால் இங்கு உள்ள திவான் எனச்சொல்லப்படும் ராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர்" என்று புகார் சொல்கிறார்கள். 

 

தமிழ்ச்செல்வன்

t

 

பாத்திமாபுரம் எனக்கு சொந்தவூர். நான் 3 மாதம் சிகிச்சைக்காகத்தான் இங்க வந்தேன். எனக்கு சரியானதும் இங்கேயே இருந்து மத்தவங்களையும் நீ பார்த்துக்க என்று சொன்னாங்க . நான் மாத்திரைகள் மட்டும்தான் கொடுப்பேன். அதற்கு மட்டும் தான் ஹால் உள்ளே நான் செல்வேன். மற்றபடி, வேறு எதுவும் எனக்கு தெரியாது. எங்கள் ஓனர் மணிவண்ணன் சென்னையிலிருந்து வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார் ஒருவர். 

 

இறந்த தமிழ்ச்செல்வனின் சகோதரர் மற்றும் அவரது ஊரைச்சேர்ந்த இளங்கீரன், அறிவழகன் உள்ளிட்டவர்களிடம் விசாரித்தபோது, "நாங்க கொண்டு வந்து சேர்த்தபோது நன்றாகத்தான் இருந்தாருங்க. காவல்துறை பணியில் இருப்பவர் குடி போதைக்கு அடிமையானதை கண்டு வருத்தப்பட்டோம். திருச்சி கே.கே.நகரில் இப்படியொரு சென்டர் இருப்பதாக விளம்பரம் மூலம் கேள்விப்பட்டு அவரை இங்கு கொண்டு வந்து சேர்த்துட்டு போனோம்.

 

ஒரு மாதத்தில குடியை மறந்து நல்ல படியா ஊர் திரும்புவார்ன்னு தான் காத்திட்டிருந்தப்ப இந்த சென்டர்லர்ந்து போன் வந்துச்சுங்க, தமிழ்ச்செல்வனுக்கு கொடுத்த மாத்திரை ஒத்துக்கல, அவருக்கு வலிப்பு வந்துச்சு, நாங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறப்பவே இறந்துட்டாருன்னு சொல்லி திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு பக்கம் உள்ள கே.எம்.சி. மருத்துவமனைக்கு வரச்சொன்னாங்க.

 

l

 

எங்க ஊர் பையன் ஒருவர் திண்டுக்கல்ல இருந்ததால அவரு உடனே திருச்சி வந்தப்ப கே.எம்.சி.மருத்துவமனைக்கு எதிரே ஆம்புலன்ஸ் ஒன்னு நின்னுட்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ்லதான் உடனே ஊருக்கு கொண்டு செல்லுங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம். நாங்களும் உடல் வந்ததும் இறுதிச்சடங்கு செய்தோம்.   உடலை குளிப்பாட்டும்போதுதான் உடம்பு முழுசா ஒரே ரத்த காயம் இருந்துச்சு, அத பாத்து அதிர்ந்த நாங்க இந்த மையத்தை தொடர்பு கொண்டோம், அவங்க சொன்ன பதில் திருப்தியா இல்ல.  ஊர்லயும் குளிப்பாட்டின பாடிய உடனே எரிச்சிடத்தான் சொன்னாங்க, நாங்க ஊர் கட்டுப்பாட்டுப்படி தமிழ்ச்செல்வன் உடம்ப நல்லடக்கம் செய்தோம்.

 

இங்கு வந்து விசாரித்த போது தான்,  தமிழ்ச்செல்வனை திவான் என்ற ராஜா கடுமையாக தாக்கினாருங்கிற விசயம் தெரியவந்துச்சு.   அந்த அடி தாங்காமத்தான் அவன் உயிரு போயிருக்குங்க. மொத்தத்துல அவன அடிச்சே கொன்னுட்டு ஒன்னும் தெரியாதது மாதிரி இன்னைக்கு ஒருத்தருக்கு அட்மிஷன் வேலையை பார்த்து ரூ.15 ஆயிரம் பணத்தையும் வாங்கிட்டானுவோ.

 

தமிழ்ச்செல்வனின் குடியை மறக்க வைப்பாங்க என்று பார்த்தா அவன் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டாங்க. தமிழ்ச்செல்வனின் மனைவி காயத்திரியும், அவர்களது குழந்தைகள் நிரைமதி மற்றும் வெங்கடேஷ் என்ற 4 மாதமே ஆன ஆண் குழந்தையும் அனாதையா நிக்குது என்றார். 

 


லைப் கேர் சென்ட்டரில் சிகிச்சையில் இருக்கும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தலைமைக் காவலராக இருக்கும் வெங்கடேசன் என்பவர் நம்மிடம், நான் கொஞ்சம் குடிக்க ஆரம்பிச்சதால, நானே இந்த விலாசத்த கண்டறிந்து இங்க வந்தேன். அதுக்கப்புறம்தான் தெரிஞ்சுச்சு இங்க நடக்கற கூத்தெல்லாம் மனித உரிமைகள் மீறல்ன்னு.

 

இந்த மையத்தில் நிரந்தர டாக்டர் யாரும் இல்லைங்க, அடிச்சு மண்டைய உடச்சுட்டா ஒருத்தர் வர்றாரு கட்டு போட்டுட்டு போய்டுறாரு. மணிவண்ணன் மற்றும் திவான் என்ற ராஜா தான் இந்த மையத்தில் இருக்குறாங்க.  நான் வந்து சேர்ந்ததிலேர்ந்த இரண்டு பேர் பலி ஆயிருக்காங்க.

 

தமிழ்ச்செல்வன் எங்ககிட்ட நல்லாத்தான் பேசினாரு. யாரும் யாருகிட்டேயும் பேசக்கூடாதுன்னு சொல்லியே என்னையும் அடிச்சு துவைச்சுட்டாங்க. ரொம்ப கஷ்டமாயிருந்துச்சு. வீட்ல உள்ளவங்களுக்கும் தகவல் கொடுக்க முடியல. ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் உங்களுக்கு சொல்லியனுப்புவோம் அப்பத்தான் யாரா இருந்தாலும் வரலாம்ன்னு சொல்லிட்டதால யாரையும் தொடர்பு கொள்ள முடியலைங்க.

 

கடந்த 2 வாரத்துக்கு முன்னாடி கண்ணன் என்ற ஒருத்தர அடிச்சே இவனுக கொண்ணுட்டானுவோங்க. இப்பத்தான் தெரிஞ்சுச்சு இவனுங்க கொன்னுட்டு கண்ணன் வலிப்பு வந்து உடம்பு சரியில்லாம செத்துட்டான்னு சொல்லி இங்குள்ள போலீஸ் ஸ்டேசனையும் சரி செஞ்சு வேலையை முடிச்சுட்டாங்க.

 

இங்க எங்கள அடிக்கறதுக்குன்னு ரமேஷ் மற்றும் ராஜாவை தனியாவே வச்சிருக்காங்க. நாங்க காசு கட்டிட்டு வந்துதான் இங்க இருக்கோம். எங்களுக்கு நல்ல சாப்பாடே இல்லைங்க என்றார். 

இதுகுறித்து தகவல் பெற்று வந்த கே.கே.நகர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசுவோ, "இந்தப் பகுதியில குடிபோதை மறுவாழ்வு மையம் இருப்பது தெரிந்த ஒன்றுதான். ஏற்கனவே கண்ணன் இறந்தப்பத்தான் நான் இங்க வந்து விசாரிச்சேன். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சொன்னாலும் முறையா யாரும் கம்ப்ளைண்ட் கொடுக்கல. இப்பத்தான் கம்ப்ளைண்ட் ஒன்னு வந்துருக்கு.  முறையா விசாரிச்சு கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன்.

 

l

 

இவங்க ஊர்ல உடலை அடக்கம் செய்யும் முன்பு எங்ககிட்ட போன்லையாவது தெரிவிச்சிருக்கலாம், இல்ல அந்த ஊரு போலீஸ் ஸ்டேஷனிலாவது  சொல்லிருக்கலாம். இரண்டையுமே விட்டுட்டு இப்ப வந்திருக்காங்க. எங்க மேலதிகாரிங்கட்ட சொல்லிட்டு சட்டப்படி நடவடிக்கை கட்டாயம் எடுப்போம்" என்றார். இங்கு 27 பேர் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் பலரை, தற்போது அவர்களின் உறவினர்களே நேரில் வந்து சங்கிலிகளை அகற்றி அழைத்துச் சென்றுவிட்டனர் . 

 

லைப் கேர் சென்டர் குடி மற்றும் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சென்னை மனநல இயக்குனரகம் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர் நிரஞ்சனா தலைமையில் இருவர் நல்வாழ்வு மையத்தில் விதிமீறல் உள்ளதா என தற்போது ஆய்வு நடத்தி வருகிறார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

To maintain honesty.. unmanned shop for students!

 

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ‘ஹானஸ்ட் ஷாப்’ எனும் ஆளில்லா கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை பள்ளி தலைமை ஆசிரியர் விமலா திறந்துவைத்தார். 

 

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “வாழ்க்கையில் அனைவரும் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, ஆளில்லா கடை ‘ஹானஸ்ட் ஷாப்’  திறக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், பென்சில், தாள்கள், புத்தகங்கள் உட்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் அசல் விலையுடன் அலமாரியில் அடுக்கப்பட்டு அருகிலேயே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை மாணவர்களே எடுத்துக் கொண்டு அதற்கான விலையினை உண்டியலில் செலுத்திவிடும் வகையில் ஆளில்லா கடை ஹானஸ்ட் ஷாப் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Impersonation fraud.. Jail sentence for ADMK leader!

 

திருச்சி, மணப்பாறையை அடுத்த போடுவார்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (60) இவர் மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக உள்ளார். இவருக்கும் மணப்பாறையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையும், மாற்றுத் திறனாளியுமான நிர்மலாதேவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகள் உள்ள நிலையில் மற்றொரு பெண்ணான நிர்மலா தேவி (இருவருக்கும் ஒரே பெயர்) என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியான நிர்மலா தேவி தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

 

இந்நிலையில் முதல் மனைவியான ஆசிரியை நிர்மலா தேவியின் பெயரில் மணப்பாறையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை தனது இரண்டாவது மனைவியும் நிர்மலாதேவி என்பதால் ஆள்மாறாட்டம் செய்து (இரண்டாவது மனைவியை முதல் மனைவியாக காண்பித்து) தன்னுடைய பெயருக்கு 2018 ம் ஆண்டு நவம்பரில் மணப்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி பதிவு செய்தார். இந்த மோசடி குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி நிர்மலா தேவி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.

 

இதுகுறித்து மணப்பாறை போலீசார் சந்திரசேகர் மற்றும் இவரது இரண்டாவது மனைவி நிர்மலாதேவி ஆகிய இருவர் மீதும் 419 மற்றும் 420 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

 

சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவியும் முன்னாள் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினருமான நிர்மலா தேவி மற்றும் சாட்சி கையொப்பம் போட்டவர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

 

இருபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த இவ்வழக்கில் சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிர்மலா தேவி ஆகிய இருவருக்கும் ஒரு பிரிவிற்கு தலா 3 ஆண்டுகள் வீதம் இரண்டு பிரிவுகளுக்கும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மற்ற இருவரையும் விடுதலை செய்து நீதிபதி கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பிரமுகர்களான கணவன் மனைவி தம்பதிக்கு மோசடி வழக்கில் 6 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ள நிகழ்வு மணப்பாறை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Tamil Nadu Finance Minister  Palanivel Thiagarajan Award

 

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்து சாதனை படைத்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என்.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் 17 பேருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.

 

இதில் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு, பொது நிர்வாகத்துறையின் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் அகிலா, இந்திய தொழில்நுட்ப மேலாண்மை கழகத்தின் இயக்குனர் பவன்குமார் சிங், முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகாலிங்கம், தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பாஸ்கர் பட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
trending

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

 

ramajeyam incident police investigation trichy

 

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம் கொலை இருவரிடம் சிறப்பு புலனாய்வு தனிப்படையினர், விசாரணை நடத்தியுள்ளனர். 

 

கடந்த 2012- ஆம் ஆண்டு நடைபயிற்சிக்கு சென்ற கே.என்.ராமஜெயம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், காவல்துறை திணறி வருகிறது. 

 

இந்த நிலையில், கடந்த 2001- ஆம் ஆண்டு தி.மு.க. தலைமை செயற்குழுவின் உறுப்பினராக இருந்த எம்.கே.பாலனும், நடைபயிற்சியின் போது கடத்தப்பட்டார். இரு கடத்தலும் ஒத்துப்போவதாக கருதப்படுவதால் எம்.கே.பாலன் வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில் குமார் ஆகியோரிடம் திருவெறும்பூரில் சிறப்பு புலனாய்வு தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
nkn_parinduraigal

இதை படிக்காம போயிடாதீங்க !

24x7_seithigal
24x7_seithigal

 

Heavy rain at Trichy

 

திருச்சியில், நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. விடிய விடிய சுமார் 5 மணி நேரம் வரை இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக திருச்சி மாநகரில் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தெப்பம் போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், சாக்கடை கட்டுமான பணிகள், சாலை பழுது நீக்கும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பெரும்பாலான சாலைகள் பள்ளமும் மேடுமாக காட்சியளித்தது.

 

இந்நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை காரணமாக சாலைகள் அனைத்தும் சேரும் சகதியுகமாக மாறிவிட்டது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் குடியிருப்பு பகுதிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. ஈரப்பதம் காரணமாக கார்கள் ஆங்காங்கே சேற்றில் சிக்கிக்கொண்டன. இதனால் எவ்வித வாகனங்களும் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. 

 

இந்த வகையில் திருச்சி கருமண்டம் ஆர்.எம்.எஸ் காலனி பகுதியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டுக்கு செல்லும் சாலையும் இதே போல் பள்ளமும் மேடுமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. தற்போது மழை காரணமாக முற்றிலும் சேரும் சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

 

இது குறித்து மக்கள் மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் குடியிருக்கும் வீட்டின் அருகிலேயே உள்ள சாலையை சீர் செய்ய மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஆகவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் செல்லும் வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
most_read

இதை படிக்காம போயிடாதீங்க !